வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர்! வெளியான முக்கிய அறிவிப்புகள்
தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை, வேளாண்முறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாட்களாக இருக்கும் கோரிக்கையாகும்.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலின் போது வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.
அதன்படி தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தவுடன் தமிழகத்தில் விவசாயத் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழகத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்த நிலையில் வேளாண் துறைக்கான பட்ஜெட்டும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேற்றைய தினம் தமிழக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் முறையாக இ பட்ஜெட் தாக்கலானது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இன்றைய தினம் வேளாண் துறைக்கான பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
அவர் பேசுகையில், சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம்.
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்காக இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக குறிப்பிட்டார்.
முக்கிய அறிவிப்புகள்
* தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும்.
* உணவு தானிய பயிர்கள், தென்னை, கரும்பு, பருத்தி, சூர்யகாந்தி பயிர்களில் தேசிய அளவில் முதல் 3 இடங்களில் தமிழகம் இடம்பெற வழிவகை செய்யப்படும்.
* வேளாண் தொகுப்பு திட்டம், மானாவாரி நில மேம்பாடு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட 16 திட்டங்கள் மூலம் இலக்கை அடைய வழிவகை செய்யப்படும்.
* 5 ஆண்டுகளில் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் திட்டங்கள் செயல்படுத்தப்படும், அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்றவையாக மாறுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
* வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தரிசு நிலங்களில் கூடுதலாக 11.75 ஹெக்டர் பரப்பில் பயிரிட்டு 75%ஆக உயர்த்த நடவடிக்கை
* இருபோக சாகுபடி பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை
* சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும்.
* தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி உயர்த்தப்படும்.
* உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டம்.
* உற்பத்தித் திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்புத் தொகுப்பு திட்டம்.
* வேளாண்மையின் மகத்துவத்தை தெரிந்துகொள்ளும் வகையில் மாநில அளவில் மரபுசார்பு வேளாண்மைக்கான அருங்காட்சியம் அமைக்கப்படும்.
* மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அறுவடைக்கு பிறகு இழப்புகளை தவிர்க்கவும் 52 கோடியில் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும்.
* பயறு வகைகளை கொள்முதல் செய்து மதிய உணவு திட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேளாண்மையின் பெருமையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள சென்னையில் மரபுசார் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.