சுட்டெரித்து வீசப்போகும் அக்னி நட்சத்திர அனல் காற்று - 5 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - மக்களுக்கு இந்திய வானிலை எச்சரிக்கை

By Nandhini Apr 29, 2022 07:34 AM GMT
Report

அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்க உள்ளது. இந்த அக்னி வெயில் மே 29ம் வரை மக்களை மட்டுமல்ல, வன விலங்குகளையும் வாட்டி எடுக்க உள்ளது.

பல இடங்களில் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. தெருவோரங்களில் கடை வைத்துள்ளவர்கள், டிராஃபிக் போலீசார், வெளியில் வேலை செய்பவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்.

பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. வட இந்தியாவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இதுகுறித்து வானிலை மைய விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமனி நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அந்த செய்திக்குறிப்பில், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியாணா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும். இதனால், முடிந்தவரை தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் செல்வது நல்லது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வெப்ப நிலை அதிகரித்து, அனல் காற்று வீசக்கூடும் என்பதால், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதிக வெயில் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரித்து வீசப்போகும் அக்னி நட்சத்திர அனல் காற்று - 5 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - மக்களுக்கு இந்திய வானிலை எச்சரிக்கை | Agni Natchathiram