சென்னையில் அக்னிபத் போராட்ட பதற்றம்... - ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அக்னி பாத் திட்டம்
இந்திய ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 6 மாத பயிற்சிக்குப் பின்னர் 4 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் பணிக்காலம் முடிந்து தேர்வு செய்யப்படும் கடும் எதிர்ப்பு 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னையில் போராட்டம்
சென்னையில் ஆங்காங்கே போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதால் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அக்னி பாதை ராணுவ ஆள் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ராஜு ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதேபோல், எக்மோர் ரயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்த இரு ரயில் நிலையங்களிலும் தலா 150 பேர் என 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சென்னையில் உள்ள பிற ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.