இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு? - பிரதமர் நாளை முக்கிய ஆலோசனை

COVID-19 Narendra Modi
By Thahir Apr 24, 2022 03:30 PM GMT
Report

கடந்த 2 ஆண்டுகளாக உலகையே முதல் அலை, 2-வது அலை என்று உலுக்கிக் கொண்டிருந்த கொரோனா, தடுப்பூசி வந்த பிறகு வேகம் குறைந்து ஓரளவு கட்டுக்குள் வந்தது. எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில், இப்போது

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கடந்த 1-ந்தேதி முதல் சீனாவில் உள்ள மேற்கு மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

அதாவது, மீண்டும் ஒமைக்ரான் பரவல் கூடியுள்ளதால் முக்கிய நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது.

டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த இருவாரங்களாக இந்தியாவில் தொற்று பாதிப்பு ஏறுமுகத்தை கண்டுள்ளது.

இதனால், பல மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், வரும் புதன்கிழமை  உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி , கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

காணொலி வாயிலாக நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மண்டவியா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த ஆலோசனையின் போது, சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி விவரம், பூஸ்டர் தடுப்பூசி திட்டம் , சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் போக்கு ஆகியவை குறித்து விளக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.