ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு - 100 பேர் பலியானதாக தகவல்
ஆப்கானிஸ்தானின் மசூதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேலும் இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். அதேசமயம் சமீப காலமாக அங்கு இத்தகைய கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வரும் ஐஎஸ் இயக்கமே இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.