தாலிபான்கள் பயந்து பாகிஸ்தானில் ஆப்கான் வீராங்கனை குடும்பத்தோடு தஞ்சம்

Women Afghanistan Team Taliban Food Ball
By Thahir Sep 15, 2021 12:50 PM GMT
Report

தலிபான் தீவிரவாதிகளுக்கு அஞ்சி ஆப்கன் கால்பந்து அணியைச் சேர்ந்த 32 வீராங்கனைகள் பாகிஸ்தானில் குடும்பத்தோடு தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடனடி விசா வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானைத் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். கடந்த முறை ஆட்சியைப் போல் இல்லாமல் இந்த முறை பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் என்று தலிபான் தீவிரவாதிகள் தெரிவித்திருந்தனர்.

தாலிபான்கள் பயந்து பாகிஸ்தானில் ஆப்கான் வீராங்கனை குடும்பத்தோடு தஞ்சம் | Afghanistan Taliban Women Food Ball Team

ஆனால், தலிபான்கள் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து திடீரென மாறி, பெண்கள் வேலைக்குச் செல்லவும், ஆடவர்களுடன் சேர்ந்து கல்வி பயிலவும் தடை விதித்தனர்.

குறிப்பாக, பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தலிபான் தீவிரவாதிகள் தடை விதித்துள்ளனர். இதனால், மகளிர் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளிலும் பெண்கள் பங்கேற்கக் கூடாது என்று தடை விதித்த தலிபான்கள், ஆண்கள் பங்கேற்கத் தடையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் கத்தாருக்குப் பயிற்சிக்காகச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

காபூல் விமான நிலையத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கன் மக்கள் 170 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின் நிராதரவாக இருந்த கால்பந்து வீராங்கனைகள் 32 பேர், எங்கு செல்வது எனத் தெரியாமல் தவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் விளையாட்டில் பெண்கள் பங்கேற்கத் தலிபான்கள் தடை விதித்ததால், கால்பந்து வீராங்கனைகளுக்குப் பெரும் அச்சறுத்தல் ஏற்பட்டது.

இதையடுத்து, பிரிட்டனைச் சேர்ந்த அமைதிக்கான கால்பந்து எனும் தொண்டு நிறுவனம் ஆப்கனைச் சேர்ந்த 32 கால்பந்து வீராங்கனைகள், அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் பாகிஸ்தான் அரசின் உதவியுடன் அந்நாட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தது.

ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் அரசும் உடனடியாக விசா வழங்கி அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது.

தற்போது பெஷாவரில் பாகிஸ்தான் கால்பந்து தலைமை அலுவலகத்தில் தங்கியுள்ள கால்பந்து வீராங்கனைகள் 32 பேர் அவர்களின் குடும்பத்தாரும் லாகூருக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.