ஆப்கானில் உயிருக்கு பயந்து பெண் நீதிபதிகள் தலைமறைவு - காரணம் என்ன?
ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200 பெண் நீதிபதிகள் தாலிபன் ஆட்சியின்கீழ் தண்டனைக்கு பயந்து தலைமறைவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் நீதிபதிகள் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளனர்.

அதில் நீதிபதி மசூமா பாலியல் வன்புணர்வு, கொலை, சித்ரவதை போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்காக் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு எதிராகக் குற்றத்தீர்ப்பு வழங்கியிருக்கிறார் .
ஆனால் அவர் வாழும் நகரம் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவருக்குக் கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியதாகவும்.
அவரது அலைபேசிக்குக் குறுஞ்செய்திகளும் குரல் செய்திகளும் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகளும் வந்தபடியே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
"தாலிபன்கள் சிறையில் இருந்த எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள் என்று ஒரு நள்ளிரவில் கேள்விப்பட்டோம். உடனே வீட்டை விட்டு வெளியேறினோம்" என்கிறார் மசூமா.
மேலும் அவர் "நான் நகரத்துக்கு வெளியில் போக காரில் பயணித்தபோது புர்கா அனிந்துகொண்டேன், அப்போதுதான் யாரும் என்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருப்பார்கள்.
எல்லா தாலிபன் சோதனைச் சாவடிகளையும் அதிர்ஷ்டவசமாகக் கடந்துவிட்டோம்" என்கிறார். அவர் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அவரது வீட்டுக்குத் தாலிபன்கள் வந்ததாக அண்டை வீட்டாரிடமிருந்து மசூமாவுக்கு செய்தி வந்தது.
அவர்களைப் பற்றி விவரித்ததை வைத்தே, அவர்கள் யார் என்பதை மசூமா அறிந்துகொண்டாதாக தெரிவித்துள்ளார்.
தாலிபன்கள் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்பு, தாலிபனைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியைக் கொடூரமாகக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கை மசூமா விசாரித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மசூமா தீர்ப்பளித்துள்ளார். "அந்த இளம் பெண்ணின் உடல் அடிக்கடி என் மனதுக்குள் வந்து போகும்.
அது ஒரு கொடூரமான குற்றம். வழக்கு முடிந்தபிறகு என் அருகில் வந்த அந்தக் குற்றவாளி, "நான் வெளியில் வந்தபிறகு, என் மனைவிக்கு என்ன செய்தேனோ அதையே உனக்கும் செய்வேன்," என்று மிரட்டல் விடுத்தார்.
அப்போது நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியபிறகு அவரிடமிருந்து பலமுறை அழைப்பு வந்துவிட்டது, நீதிமன்றத்திலிருந்து என்னைப் பற்றிய எல்லா தகவல்களையும் சேகரித்துவிட்டதாகக் கூறுகிறார்.
"உன்னைத் தேடிப்பிடித்துப் பழி தீர்ப்பேன்" என்று மிரட்டுகிறார்" என்கிறார் மசூமா. ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 220 பெண் நீதிபதிகள் தலைமறைவாக இருப்பதாக தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.