ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர் மீது தாலிபான்கள் கொடூர தாக்குதல்

attack Afghanistan Journalist
By Thahir Oct 22, 2021 06:04 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி உரிமை கோரி நடைபெற்ற போராட்டத்தை செய்தியாக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சியமைத்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. பெண்களுக்கு கல்வி மறுப்பு, பத்திரிகை சுதந்திரம் மறுப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தலிபான்கள் விதித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர் மீது தாலிபான்கள் கொடூர தாக்குதல் | Afghanistan Taliban Journalist Attack

தாலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதற்கு எதிராக வியாழக்கிழமை தலைநகர் காபூலில் போராட்டம் நடைபெற்றது.

20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் கல்வியை அரசியலாக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் இந்தப் போராட்டத்தை செய்தியாக்க சென்ற பத்திரிகையாளர்களை தாலிபான் அமைப்பினர் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய போராட்டத்தை ஒருங்கிணைத்த பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஷாரா முகமதி, "தாலிபான்கள் யாரையும் மதிப்பதில்லை.

வெளிநாட்டவர்கள், பெண்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்கும் அவர்கள் மரியாதை தருவதில்லை." எனத் தெரிவித்தார்.

மேலும், "பெண் குழந்தைகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் தாலிபான்கள் தங்களுக்கு சரி எனப்படுபவற்றை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.