ஆப்கானிஸ்தான் தாலிபான்களை ஆதரிக்கும் - பாகிஸ்தான் பிரதமர் இம்ராம் கான்
ஆப்கானிஸ்தானில் நடந்ததுபோல் அடிமை விலங்கை உடைத்தெறிய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாலிபான்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
பாகிஸ்தானில், தேசிய அளவிலான ஒரே கல்விக் கொள்கையை பிரதமர் இம்ரான் கான் இன்று அறிமுகப்படுத்தினார். அதனை ஒட்டி நடந்த விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் ஆங்கில மொழிக்கல்வியை எதிர்த்தும் அதற்கு தலிபான்களை மேற்கோள் காட்டியும் இம்ரான் கான் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

பிரதமர் இம்ரான் கான் எப்போது நாம் வேறொரு கலாச்சாரத்தை வேண்டி விரும்பி ஏற்கிறோமோ அப்போது நாம் அந்தக் கலாச்சாரத்திற்கு மன ரீதியாக அடிமையாகி விடுகிறோம்.
ஆப்கானிஸ்தானில் இப்போதுதான் அடிமை விலங்கு அறுத்தெறியப்பட்டுள்ளது. அதேபோல் நாமும் ஆங்கில மோகத்தை அறுத்தெறிய வேண்டும்.
மனரீதியாக ஒரு விஷயத்துக்கு அடிமையாக இருப்பது நிஜ அடிமைத்தனத்தைவிட மிகவும் மோசமானது. அப்படி மனரீதியாக சிறுமைப்பட்டுவிட்டால் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க இயலாது.
பாகிஸ்தானில் தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. நீங்கள் ஆங்கிலவழிக் கல்வியைத் தேர்வு செய்யும்போது அந்த மொழி சார்ந்த கலாச்சாரம் உங்களை ஆக்கிரமித்துவிடும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கலாச்சார ஊடுருவல் நோக்கில் தான் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. நம் நாட்டில் வகுப்புவாத பிரிவினைகள் மொழி அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டன.