எங்களை உலகம் விரைவில் அங்கீகரிக்கும்: தலிபான்கள் நம்பிக்கை

Afghanistan Taliban Hope
By Thahir Sep 28, 2021 03:32 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகள் தலைமையிலான அரசை உலக நாடுகள் விரைவில் அங்கீகரிக்கும் என்று தலிபான் அரசின் தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான ஜபிபுல்லாஹ் முஜாஹித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

எங்களை உலகம் விரைவில் அங்கீகரிக்கும்: தலிபான்கள் நம்பிக்கை | Afghanistan Taliban Hope

பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என முதலில் தெரிவித்த நிலையில், பெண்கள் வேலைக்குச் செல்லக் கட்டுப்பாடு விதித்தனர்.

மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளைத் திறந்த தலிபான்கள், மாணவிகள் குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

உயர்கல்விக் கூடங்களில் மாணவிகள், மாணவர்களுக்குத் தனித்தனி வகுப்பறையும், இருதரப்பும் பார்க்காத வகையில் திரையிடப்பட்டுள்ளது.

மீண்டும் கடந்த 1996-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சி வருமோ என மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால், தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால், ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அரசை ஏற்கமாட்டோம் என்று அமெரிக்கா, ஜப்பான், கனடா, ரஷ்யா பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தலிபான் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான ஜபிபுல்லாஹ் முஜாஹித் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

“இந்த உலகம் விரைவில் தலிபான்கள் தலைமையிலான அரசை விரைவில் அங்கீகரிக்கும். பல்வேறு நாடுகளின் பல பிரதிநிதிகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்து சென்றுள்ளனர்.

தலிபான்களும் தங்களை அங்கீகரிக்கக் கோரி ஐ.நா. சபைக்கும் கடிதம் எழுதியுள்ளோம். எங்களை அங்கீகரியுங்கள் எனக் கூறுவது எங்களின் உரிமை. ஐ.நா. சபையின் பிரிதிநிதிகளுடன் பேச்சு நடத்துவதில் தலிபான் தலைவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் ஆகியவற்றை மதிப்பது, முழுமையான அரசை ஏற்படுத்துவது, ஆப்கானிஸ்தான் மண்ணை மற்ற நாடுகளைத் தாக்கவும், தீவிரவாதிகளின் புகலிடமாகவும் இருக்காமல் தடை செய்வது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சர்வதேச நாடுகள் பேசி வருகின்றன.

இவற்றைச் செய்தால் தலிபான் அரசை அங்கீகரிக்கப்பதாக உலக நாடுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தையும் விரைவில் அமல்படுத்த இஸ்லாமிய எமிரேட் ஆப்கானிஸ்தான் உறுதியளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆனால், உலக நாடுகள் வலியுறுத்திய எந்தக் கோரிக்கையையும் தலிபான்கள் இதுவரை அமல்படுத்தவில்லை.