உயிரை கையில் பிடித்துக் கொண்டு காருக்கு அடியில் பதுங்கித் தப்பித்த ஆப்கான் முதல் பெண் மேயர்
ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் சரிஃபா கஃபாரி நாட்டிலிருந்து வெளியேறி ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது.
இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் இனி சண்டை நடக்காது, அமைதி நிலவும். இஸ்லாம் விதிகள்படி பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்த நிலையில் தலிபான்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஆப்கனின் முதல் பெண் மேயர் சரிஃபா கஃபாரி சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்த நிலையில் தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், 'சரிஃபா கஃபாரி தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலையத்துக்கு காரில் பதுங்கியபடி சென்றார்.
பின்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி துருக்கி வழியாக தற்போது ஜெர்மனிக்குச் சென்றார்' என்று செய்தி வெளியானது.
நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து சரிஃபா கஃபாரி கூறும்போது, 'நான் எனது தந்தையை இழக்கும்போது, அதுபோன்ற ஒரு துன்பம் என் வாழ்வில் ஏற்படாது என்று எண்ணினேன்.
விமானம் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்லும்போது, எனது தந்தையை இழந்த வலியைவிட அதிகமாக வலித்தது. காபூலைத் தலிபான்கள் கைப்பற்றியது மோசமான சம்பவம். நான் என் நாட்டை விட்டுச் செல்வேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை' என்று தெரிவித்தார்.