ஆப்கானிஸ்தான் பெண் கவர்னர் கடத்தல், தலைவர் சிலை தகர்ப்பு- தாலிபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியானில் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹசாரா சமூகத்தின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை வெடி வைத்து தலிபான்கள் தகர்த்துள்ளனர்.
கடந்த முறை ஆப்கனைக் கைப்பற்றியபோது, பாமியானில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த, நூற்றாண்டுகள் பழமையான புத்தர் சிலைகளை வெடிவைத்து தலிபான்கள் தகர்த்து அழித்தனர்.
இந்த முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஹசாரா இனத்தின் தலைவரின் சிலையை தலிபான்கள் தகர்த்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் வாழும் இனத்தவர்கள் ஹசாராக்கள் அல்லது ஹசாராஜத். 13ம் நூற்றாண்டில் மங்கோலிய வம்சத்தை உருவாக்கிய செங்கிஸ்கான் வழித்தோன்றல்கள் ஹசாராக்கள் என்று வரலாற்றுத் தகவல்கள் கூறப்படுகிறது.

இந்த ஹசாரா இனத்தின் தலைவராக இருந்த அப்துல் அலி மஸாரியை கடந்த 1995-ம் ஆண்டில் தலிபான்களால் தூக்கிலிட்டனர். ஆனால், அப்துல் அலியின் மிகப்பெரிய சிலை பாமியான் நகரில் மக்களால் நிறுவப்பட்டது. ஆனால், ஹசாரா இனத்தவரின் மீதான வெறுப்பால், ஹசாரா இன மக்களை தொடர்ந்து தலிபான்கள் துன்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆப்கன் முழுவதும் தலிபான்கள் வசம் வந்துள்ளதால், ஹசாராக்கள் மீதான அடக்குமுறையைதலிபான்கள் தொடங்கிவிட்டனர்.அதில் முதல்கட்டமாக ஹசாரா இனத் தலைவர் அப்துல் அலியின் சிலையை தலிபான்கள் தகர்த்துள்ளனர்.
மனித உரிமை ஆர்வலர் சலீம் ஜாவித் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ' பாமியான் நகரில் உள்ள ஹசாரா இனத் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை தலிபான்கள் தகர்த்துள்ளனர்.
கடந்த முறை ஆட்சியின்போது அப்துல் அலியை தூக்கிலிட்டு புத்தர் சிலைகளை உடைத்து, வரலாற்று சுவடுகளை தலிபான்கள் அழித்தனர். இதுதான் தலிபான்கள் கூடுதலான மன்னிப்பா' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஹசாரா இனத்தவர்கள் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களில் மேயர்களாக பெண்கள்பதவியில் உள்ளனர். அதில் சாஹர்ஹிந்த் மாவட்ட கவர்னர் சலிமா மஸாரியை தலிபான்கள் சிறைப்படுத்தி வைத்துள்ளனர். இதை ஹசாரா இனவட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.
தலிபான்கள் தரப்பில் நேற்று அதன் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில், 'இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும். பெண்கள் சுகாதாரத்துறை, உள்ளிட்ட துறைகளில் பணியாற்றலாம். கல்வி கற்கலாம்' எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஹசாரா இனத்தின் பெண் கவர்னர் ஒருவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
So Taliban have blown up slain #Hazara leader Abdul Ali Mazari’s statue in Bamiyan. Last time they executed him, blew up the giant statues of Buddha and all historical and archeological sites.
— Saleem Javed (@mSaleemJaved) August 17, 2021
Too much of ‘general amnesty’. pic.twitter.com/iC4hUZFqnG