தாலிபான்கள் தீவிரவாத அமைப்பு என தடை செய்ய மத்திய அரசுக்கு துணிச்சல் இருக்கா? சவால் விடுத்த அசாசுதீன் ஒவைசி

இந்தியாவில் தலிபான் ஒரு தீவிரவாத அமைப்பு எனக் கூறி, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(யுஏபிஏ) சட்டத்தின் கீழ் தடை செய்ய மத்திய அரசுக்கு துணிச்சல் இருக்கிறதா என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி சவால் விடுத்துள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஊடகங்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் மத்திய அரசுக்கு துணிச்சல் இருந்தால், தலிபான் ஒரு தீவிரவாத அமைப்பு என சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்ய முடியுமா.

தலிபான்கள் வளர்வது இந்தியாவுக்கு பெரும் கவலைக்குரியதாக மாறிவிடும் என்றும் கடந்த 2013ம் ஆண்டிலிருந்து நான் கூறிக்கொண்டிருக்கிறேன்.

தலிபான்கள் வளர்ச்சி சீனா, பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் பயன் அளிக்கலாம். ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை அனைத்து முஸ்லிம்களும் தலிபான்கள்தான்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சி 100 இடங்களில் போட்டியிடும்.

எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டு வைத்து போட்டியிடப் போவதில்லை. நாங்கள் வேறு ஏதோ கட்சிக்கு உதவி செய்தோம் எனக் குற்றம்சாட்டும் கட்சிகள் மக்களவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடாத நிலையில் என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டும்.

பிஹாரில் நாங்கள் 19 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றோம், முஸ்லிம்கள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெறுவதற்காக எங்கள் தடத்தை விரிவுபடுத்துவோம்.

உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் முலாயம் சிங் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது என்பது மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி.

உ.பி. முஸ்லிம்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கியவர்கள், கல்வி இடைநிற்றலிலும் அதிகமான சதவீதத்தில் உள்ளனர்.

அதிகமான குழந்தைகளுக்கு சரிவிகித சத்துணவு கிடைக்கவில்லை சமீபத்தில் கிஷான்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் சந்தேகப்படும்படியான வெளிநாட்டினரை அடையாளம் காணும்படி உள்ளூர் அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவை காரணம்காட்டி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு என்பது, என்ஆர்சி சட்டத்தை பின்வாசல் வழியாக அமல்படுத்தும் முயற்சியாகும். இதுதொடர்பாக மாநில அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒவைசி தெரிவித்தார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்