பர்தா அணியாததால் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் பெண் ஒருவர் பர்தா அணியாததால் தாலிபான்கள் ஈவு இரக்கமில்லாமல் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் அந்த நாட்டில் உள்ள முக்கிய பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர். இதையடுத்து ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலையும் கைப்பற்றினர்.
இதனால் ஆப்கான் மக்கள் உயிருக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஆப்கானில் இனி சண்டை நடக்காது என்று தாலிபான்கள் உறுதியளித்த சில நேரத்திற்குள் அங்கே ஒரு கொடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாக்கர் மாகாணத்தில் வடக்கு நகரான தலகோன் பகுதியில் பெண் ஒருவர் பர்தா அணியாமல் இருந்ததால் அவர் மீது தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
நடுரோட்டில் இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்ணின் உடலை கண்டு குடும்பத்தார்கள் கதறி அழும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதற்கு மத்தியில் ஜலாலாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தாலிபான்கள் தங்கள் கொடியை அரசு அலுவலங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆப்கன் தேசிய கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறினர்.
அப்போது தாலிபான்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.