ஆப்கானிஸ்தானில் மாணவிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தாலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் விரைவில் மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றினர்.தாலிபான் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் அங்கு தற்காலிக அரசு அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த அரசு இதுவரை பதவி ஏற்காமல் செயல்பட்டு வருகிறது. தாலிபான்களின் ஆட்சிக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
அதேசமயம் அங்கு பெண்களுக்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில்,பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக உலக நாடுகள் தாலிபான் அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தாலிபான் அரசின் முக்கிய துறையின் செய்தித் தொடர்பாளர் சயீது கோஸ்டி அளித்த பேட்டியில், எனக்கு கிடைத்த தகவலின்படி விரைவில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என அனைத்திலும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மேலும் பெண்கள் ஆசிரியப் பணி செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.