ஜெர்மனியில் உணவு டெலிவரி செய்யும் ஆப்கனின் முன்னாள் அமைச்சர் - தற்போதைய நிலை என்ன?
ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சையத் அகமத், தற்போது ஜெர்மனியில் உணவு டெலிவரி செய்துவரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து, ஜெர்மனியில் செயல்படும் லீப்ஸிகர் வோல்க்ஸீயுடங் பத்திரிகை வெளியிட்ட பதிவில், “ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சையத் அகமத், ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் அப்பகுதி வாசிகளுக்கு உணவுப் பொருட்களை டெலிவரி செய்து வருகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டெலிவரிக்கான உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சையத் அகமத் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சையத் அகமத், அதன்பின் ஜெர்மனியின் லீப்ஜிக் நகருக்குக் குடிபெயர்ந்தார். இதுகுறித்து சையத் அகமத் பேசும்போது, “நான் தற்போது எளிமையாக வாழ்கிறேன். மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.

நான் நிறைய பணிகளுக்கு முயற்சி செய்தேன். ஆனால், எனக்குக் கிடைக்கவில்லை. நான் பணிக்குச் செல்லும் பணத்தைச் சேமித்து ஜெர்மன் மொழி கற்று வருகிறேன். ஜெர்மன் டெலிகாம் துறையில் பணிக்குச் சேர்வதுதான் தற்போது என் இலக்காக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.