நடிகர் சூர்யா மீது வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு... ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்?
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ஜெய்பீம் படத்தை தயாரிக்கப்பட்டு கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியானது. சூர்யாவே நாயகனாகவும் நடித்திருந்த இப்படம் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றதோடு பல விருதுகளையும் குவித்தது.
அதேசமயம் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் வன்னியர் சமுதாயத்தின் குறியீடு இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் - நடிகர் சூர்யா இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் என்பவர் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெய்பீம் படம் தொடர்பாக புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில் ஜெய்பீம் திரைப்படம் தேச ஒற்றுமையை சீர்குலைக்கவும், இந்து வன்னியர் சமூக மக்களை புண்படுத்தியும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் அகரம் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்து அதனை வைத்து ஜெய்பீம் படத்தை எடுத்துள்ளதாகவும், அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சமீபத்தில் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சந்தோஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை கடந்த எப்ரல் 29 ஆம் தேதி விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் புகார் மீது ஐந்து நாட்களில் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென ஆய்வாளருக்கு உத்தரவிட்டதோடு முதல் தகவல் அறிக்கையை மே 20 ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று வேளச்சேரி காவல் நிலையத்தில் ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது 295(A) ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதனால் மீண்டும் இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.