நெருங்கும் பொங்கல் பண்டிகை.. பொதுமக்கள் இதை செய்ய வேண்டாம் - வெளியான உத்தரவு!
போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்க என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
போகி பண்டிகை
தமிழ்நாட்டில் முக்கியமாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் தை மாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் 13 ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனையடுத்து 14.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் துவக்கமாகக் கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், வீட்டை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களைத் தீயிட்டு எரிக்கும் நாள் போகிப் பண்டிகை ஆகும். பழையன பழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாகும்.
இந்த நிலையில் போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்க என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிளாஸ்டிக்
போகிப் பண்டிகையையொட்டி பயன்பாட்டில் இல்லாத பழைய துணி, பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் ரப்பர் டியூப் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மக்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
எனவே, மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர்கள், பழைய துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவற்றைத் தனியாகச் சேகரித்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.