விளம்பர பலகை அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாப பலி
விளம்பர பலகை அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது.
இந்த கோவிலின் எதிர்புறத்தில் உள்ள கட்டிடத்தில் தனியார் நிறுவனம் தங்களது விளம்பர பலகை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. இதற்காக இளங்கோ என்பவர் விளம்பரப்பலகை வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அவ்வழியே செல்லும் உயரழுத்த மின்சார கம்பி மீது பேனர் பட்டதால் இளங்கோவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இளங்கோ மின்சார தாக்கும்போது அவருக்கு உதவி செய்ய வந்த செந்தில்குமார் என்பவரும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் செந்தில் குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விளம்பர பலகை வைக்க தனியார் நிறுவனம் அனுமதி பெறாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.