நீதிமன்றத்தில் கைகூப்பி நின்ற பாபா ராமதேவ்; கேள்விகளால் சரமாரியாக விளாசிய நீதிபதிகள்!
மீண்டும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
பதஞ்சலி
பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,பாபா ராம்தேவுக்கும் ஏற்கெனவே பல முறை வார்னிங் கொடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
நீதிபதிகள் கேள்வி
முன்னதாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ராமதேவ் அளித்த பிராமாண பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயார் என்றனர்.
அதற்கு மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க வேண்டும் என்று பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா கோரிக்கை வைத்தனர். அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்?
நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என்று கேள்வி கேட்டனர். இதை தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுவதில் சில மாற்றங்களை செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.