அயோத்தி கோயில் திறப்பு விழா - வரவேண்டாம்..? அத்வானி, முரளி மனோகருக்கே இப்படியா..?
பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழாவிற்கு அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை வரவேண்டாம் என்றும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமர் கோயில்
உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இங்கு 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில் 3 தளங்கள் அமைக்கப்படுகிறது.
கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நூலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உள்பட 6 மண்டபங்கள் அமைப்பட உள்ளது. 161 அடி உயரத்தில் மூலவர் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
அத்வானி - முரளி மனோகர் ஜோஷி
இந்த கோவில் அந்த இடத்தில் கட்டப்படுவதற்கான முக்கிய பங்காற்றியவர்கள் முக்கியமானவர்கள் முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி மற்றும் பாஜகவின் முன்னாள் மூத்த நிர்வாகி முரளி மனோகர் ஜோஷி ஆகியோர்.
அத்வானி, குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து உத்தரபிரதேசத்தின் அயோத்தி வரை ரத யாத்திரையை முன்னின்று நடத்திய போது அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் முரளி மனோகர் ஜோஷி. அதே போல, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி இருவரும் சம்பவ இடத்தில்தான் இருந்தனர் என்றதும் குறிப்பிடத்தக்து
வரவேண்டாம்
இவர்கள் இருவரின் பெரும் முயற்சியினாலையே இக்கோவில் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் கோவிலின் திறப்பு விழாவிற்கு வரவேண்டாம் என்று கோயில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராமர் கோவில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், "இருவரும் குடும்பத்தில் பெரியவர்கள். வயதைக் கருத்தில் கொண்டு வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்" என்றார்.
ஆனால் பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு இருவரும் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சிப்பதாக சொன்னார்கள் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.