‘பட்லரை நான் 2-வது கணவராக வைத்து கொள்கிறேன்’ - ராஜஸ்தான் அணி சகவீரரின் மனைவி பதிலால் ஷாக்கான ரசிகர்கள்!
நடப்பாண்டின் ஐபிஎல் போட்டியின் 2-வது தகுதிச் சுற்று போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் ஒவ்வொரு முறையும் பவுண்டரிகளை விளாசும்போதும் கேமராவில் வான் டெர் டுசெனின் மனைவி லாரா தவறுதலாக காட்டப்படுகிறார்.
இதனால் பலர் லாராவை பட்லரின் மனைவி என தவறுதலாக நினைத்துவிட்டர். இது குறித்து கிண்டலாக பேசிய லாரா, “ நான் ஜோஸின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும் போது சில முறை கேமராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறார்கள்.
பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் அவரை பார்த்தது கூட இல்லை. என் கணவர் ரஸ்ஸி சில காரணங்களால் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதில் பட்லருக்கு உற்சாகத்தை தெரிவித்து வருகிறேன். இந்த சீசனில் நான் பட்லரை இரண்டாவது கணவராக தத்தெடுத்துவிட்டேன்.” என கூறியுள்ளார்.