அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடவுள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுகஇணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியினருடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் அதிமுக, பாஜக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலி தெரிவித்தார்.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக ஈணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட விரும்புவார்கள். ஆகையால்தான் பாஜகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே அதிமுக-பாஜக தனித்தனியே போட்டியிடுகிறது.
ஆனால் தேசிய அரசியலில் பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படும். அப்போதுதான் தமிழகம் வளர்ச்சி பெறும் என்றும், திமுகவின் 8 மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களே தினசரி நிகழ்கிறது. சட்ட ஒழுங்கு பிரச்சனை அடியோடு சீர்கெட்டு விட்டது எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.