அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக்கூடாது - நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.
தேர்தல் ஆணையத்தில் இன்று முறையீடு
இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவாளர்கள் உடனான தீவிர ஆலோசனைக்கு பின் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேசித் தீர்த்துக்கலாம் வாங்க... எடப்பாடி கடிதம்
எடப்பாடி ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பொதுக்குழுவுக்கு வாருங்கள்; பிரச்னைகளை பொதுக்குழுவில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவுக்கு அழைத்தது போல, பொதுக்குழுவில் பங்கேற்போம் என்று எழுதியுள்ளார்.
23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல்
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது என்றும் கட்சி விதிகளுக்கு முரணாக ஓபிஎஸ் செயல்பட மாட்டார் என்று அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்
இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் நடந்ததை தற்போது ஒப்பிட முடியாது. செயல் திட்டங்கள் இல்லாமல்தான் ஏற்கெனவே பொதுக்குழுக்கள் நடந்துள்ளன. என்று அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் இபிஎஸ் தரப்பு வாதம் செய்துள்ளது.
தடை விதிக்கக்கூடாது
மேலும், அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக்கூடாது. பொதுக்குழுவுக்கு தடை கோரும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் செய்துள்ளது.