அதிமுக பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.. திமுக பக்கம் சாய்கிறதா தேமுதிக?
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு தேமுதிக பலமுறை கோரியும் அதிமுக தரப்பில் பதில் இல்லை என்பதால் திமுக கூட்டணியையும் தேமுதிக பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே திமுக கூட்டணியால் புதிய கட்சிகளை இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு குறைவு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதிமுக, திமுக கூட்டணியில் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு, வெற்றி வாய்ப்பு தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளனர். திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று அறிவாலயத்தில் பேச்சு நடந்துள்ளது. துரிதமாக பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள் என அதிமுகவுக்கு பலமுறை தேமுதிக கோரிக்கை வைத்தும் அதிமுக தலைமை மௌனம் காத்து வருகிறது.
இதனால், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, ''ஒரு வேளை அதிமுக கூட்டணியில் இடம் பெறவில்லை என்றால் 234 தொகுதியிலும் போட்டியிட தயாராகுங்கள்'' என, கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதேவேளையில் திமுக பக்கமும் நகரலாமா என்ற திட்டத்திலும் தேமுதிக யோசித்துக்கொண்டிருக்கிறது எனக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தேமுதிக ஒரு பக்கம் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெறத் தொடங்கியுள்ளது.