நாங்க புலிவேட்டைக்கு போறோம்; வழக்கெல்லாம் எனக்கு ஜூஜூபி - செல்லூர் ராஜு!
முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
செல்லூர் ராஜு
கடந்த ஆண்டு மே மாதம் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.
அப்போது அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரை அரசு வழக்கறிஞர் பழனிசாமி, மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், செல்லூர் ராஜு நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.
எனவே, நேற்று நீதிமன்றத்தில் செல்லூர் ராஜு ஆஜராகி விளக்கமளித்ததை தொடர்ந்து, வழக்கு அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புலி வேட்டை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு "மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உண்மையைத்தான் கூறினேன். இல்லாததை பேசவில்லை.
அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு 'ஜூஜூபி'. பொதுவாழ்க்கைக்கு வந்தால், மாலை வரும், மரியாதை வரும்.
ஜெயிலும் வரும். எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வழக்குகளை பார்த்து, அதிமுக.வினர் பயப்படமாட்டார்கள்" என்கிறார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் "நாங்கள் புலிவேட்டைக்கு செல்கிறோம். எலி வேட்டையை பற்றி பேசாதீர்கள்" என கூறிச்சென்றார்.