போருக்கு தயாராக உள்ளது போல அதிமுக தேர்தலுக்கு தயாராக உள்ளது - செல்லூர் ராஜு!
அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுகளால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
செல்லூர் ராஜு
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "போருக்கு தயாராக உள்ளது போல அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளது. மன்னர் படை வீரர்களை தயார் செய்வதுபோல தொண்டர்களை எடப்பாடி பழனிச்சாமி தயார் செய்துள்ளார்.
வெறுப்பு ஏற்பட்டுள்ளது
தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் களப்பணி செய்ய அ.தி.மு.க. தயாராக உள்ளது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவைப்படுகிறது. அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுகளால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தலைவர் போல பேசுவதில்லை. அவர் மேடைப் பேச்சாளர் போல பேசி வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் உதிர்ந்த இலை. அவர்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.