அதிமுக பொன்விழா மாநாடு; பிரம்மாண்ட பிரச்சார வாகனம் - தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி!
பிரம்மாண்ட பிரச்சார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பொன்விழா மாநாடு
வரும் 20ம் தேதி அதிமுக சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு நடத்தப்பட உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த மாநாடு மதுரை ரிங் ரோடு வலையங்குளம் கருப்பசாமி கோவில் எதிரில் நடத்த பிரம்மாண்டமான ஏற்பாடுகளை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக் கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பந்தல் மற்றும் மேலை அமைக்கும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பிரச்சார வாகனம்
இந்நிலையில் கட்சியினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வாகன பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு அதிமுக சார்பில் பிரச்சார வாகனம் ரதம் போல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனம் நேற்றிரவு சேலம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இந்த வாகனத்தின் தொடக்க விழா இன்று காலை சேலத்தில் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கொடி அசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.