அதிமுக முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக் கொள்கிறது- எல்.முருகன்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு அடைந்து வருகிறது. அதிமுக எடப்பாடி பழனிசாமி தான் தன்னுடைய முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது.
ஆனால் பாஜக அதனை ஏற்கவில்லை. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக - பாஜக இடையே முரண்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது அதிமுக முதலைமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதுவரை இல்லாத வகையில் தமிழகத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி, மத்திய நிதி நிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.
மத்திய நிதி நிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்கள் இருந்தும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதனை வரவேற்க மனமில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். எட்டு வழி சாலையால் சேலத்தில் ஏற்பட உள்ள வளர்ச்சியை தடுக்கும் வகையில், சிலர் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறிய எல்.முருகன், நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணியே தொடர்வதாகவும் தெரிவித்தார்.
கூட்டணியின் பெரிய கட்சியான அதிமுக, முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அவர் கூறினார். ராகுல் காந்தி வருகையால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்றும் எல்.முருகன் கருத்து தெரிவித்தார்.