தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை - அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்தது போலீஸ்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் பகுதி தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்த செல்வம் கடந்த 1-ந் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சென்னையில் இருந்து காரில் தப்பிச் செல்வதாக
சென்னை போலீசார் மற்ற மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்து உஷார் படுத்தியதை தொடர்ந்து அனைத்து மாவட்ட போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை மடக்கி விசாரித்ததில் அவர்கள் சென்னையில் தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்றும்,
தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளாரான சேலையூர் அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரையும், காரை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த தனசீலன் என்பவரையும் போலீசார் கைது செய்து
சமயபுரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து சமயபுரம் போலீசார் சென்னை போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.