ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசு பதவி - அதிமுக கடும் எதிர்ப்பு
ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவிற்கு அரசுப்பதவி வழங்கப்பட்டதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப்பதவி
விஜய் நடிப்பில் கடைசி படமாக வெளியாகவிருந்த ஜனநாயகன் திரைப்படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் முதலமைச்சரான பின்னரும் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஜன நாயகன் திரைப்பட தயாரிப்பாளரான வெங்கட நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற அரசு பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்று தருவதே இந்த பதவியின் முக்கிய பொறுப்பாகும். இது அமைச்சருக்கு நிகரான பதவியாக கருதப்படுகிறது.
விஜய் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரை சந்தித்த போதும் KVN நிறுவனத்தின் உரிமையாளர் கே.வெங்கட நாராயணா உடன் இருந்தார்.
வெங்கட நாராயணா பின்னணி
கே.வெங்கட நாராயணா சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prestige நிறுவனத்தில் பணியாற்றி, அதன் CEO ஆக 8 ஆண்டுகள் இருந்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் பெங்களூருவை தளமாக கொண்டு, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை நிறுவிய இவர், பல மொழிகளில் முக்கிய திரைப்பிரபலங்களை வைத்து 8க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் கேவிஎன் பிராப்பர்டீஸ் (KVN Properties) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
தனது சமூகவலைதள பக்கத்தில் தமிழ் ஓரளவு தெரியும் எனவும், தெலுங்கு தாய்மொழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக எதிர்ப்பு
அரசின் இந்த நியமனத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுகவின் ஐடி விங் பக்கத்தில் வெளியான பதிவில், "கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசு?
தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா விஜய்?

அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?
கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு?
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) June 26, 2026
தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?
உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற… pic.twitter.com/NorupZ9KE1
புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.