உள்ளே நடந்தது உட்கட்சி பிரச்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின்காரசார விவாதம்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உள்ளே நடந்தது உட்கட்சி பிரச்னை எனவும், அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
காரசார விவாதம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறையை காவல் துறை தடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உள்ளே நடந்தது உட்கட்சி பிரச்னை எனவும், அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் கூறினார். அலுவலகத்திற்கு வெளியே காவல் துறை உரிய பாதுகாப்பை வழங்கியது என்றும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.

உண்மைக்கு புறம்பானது
இதையடுத்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு கூட்டத்திற்கு செல்லாமல் 8 மாவட்டச் செயலாளர்கள் தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக மேடை போட்டுக் கூட பேசத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதை கருதி முன்கூட்டியே காவல் துறையில் புகார் அளித்ததாகவும், ஆனால், உரிய பாதுகாப்பு இல்லாததால் வன்முறை நிகழ்ந்ததாகவும் குற்றம்சாட்டினார். இறுதியாக பதிலளித்த முதலமைச்சர், இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வேடிக்கை பார்த்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் குறிப்பிட்டார்.