அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
அமைச்சர் ஆனந்தை அதிமுக எம்.எல்.ஏ.க்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் இன்று சந்தித்து பேசினர்.
அமைச்சர் ஆனந்தை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் உள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக சி.வி.சண்முகம் அணியை சேர்ந்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். அதன் பின்னர், அந்த எம்.எல்.ஏ.க்களின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
இதனிடையே தற்போதுள்ள சில எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததோடு, முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலரும் தவெகவில் சேர்ந்துள்ளனர்.

சில நாட்களுக்கு பின்னர், சி.வி.சண்முகம் தவிர எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அவரது அணியை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தற்கு மன்னிப்பு கடிதம் வழங்கி ஒன்றிணைந்தனர்.
ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே மீண்டும் கட்சி பதவி வழங்கப்பட்டதால், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவியை ஏற்க மறுத்து மீண்டும் தனி அணியாகவே செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று பட்ஜெட் கூட்ட தொடரின் போதும், இரு தரப்பும் தனித்தனியாகவே சட்டமன்றத்திற்கு வருகை தருகின்றனர்.
இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆனந்தை அதிமுக எம்எல்ஏக்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

இதன் பின்னர் இந்த சந்திப்பு குறித்து பேசிய எஸ்.பி. வேலுமணி, அதிமுக எங்கள் கட்சி, நாங்கள் எப்போதும் அதிமுக தான். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேசினோம்" என தெரிவித்துள்ளார்.