நல்ல பொறியில் சிக்கிய எலி போல் திமுக இருக்கிறது-அதிமுக எம்.எல்.ஏ
"நல்ல பொறியில் சிக்கிய எலி திமுக!" - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ அதிமுக சொல்லியதை நிறைவேற்றிய கட்சி, திமுக சொல்லியதை நிறைவேற்றாத கட்சி என்பதை மக்கள் அடையாளம் காண்பார்கள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலாவை தொடர்பு கொள்ளும் அதிமுகவினரை தலைமை நீக்கம் செய்ய நிறைவேற்றிய தீர்மானத்தோடு, செய்தியாளர்களை சந்தித்தார் மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா. அப்போது அவர் கூறுகையில்,
" ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டிருக்கக் கூடிய அதிமுக இயக்கத்தில், ஒருவர் கூட சசிகலா உடன் செல்ல தயாராக இல்லை" என்றார்.
" நீட் தேர்வை நீக்க முடியாமலும், ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய முடியாமலும், கர்நாடகா மேகதாது அணைக் கட்டுமானப் பணிகளைத் தடுக்க முடியாமலும், நல்ல பொறியில் சிக்கிய எலி போல் திமுக இருக்கிறது" என்றார்.
"ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ஆயிரம் கொடுப்பதாக சொன்னார்களே! ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும். அதை எப்போது அறிவிக்கப் போகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
"வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், அவர்களுடைய அறிவிப்புகளைப் பார்த்துவிட்டு, அதிமுக சொல்லியதை நிறைவேற்றிய கட்சி, சொல்லியதை நிறைவேற்ற முடியாத கட்சி திமுக என்பதை மக்கள் அடையாளம் காண்பார்கள்", என ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ பேட்டி அளித்தார்.