‘’ கலைஞர் உணவகம் வரட்டுமே வரவேற்கிறோம் ‘’ - செல்லூர் ராஜு பரபரப்பு கருத்து
2013ஆம் ஆண்டு நகர்ப்புற ஏழைகளுக்காக தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. படிபடியாக உயர்த்தப்பட்டு தற்போது 700 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்துமா என கேள்வியெழுந்துள்ளது.
இந்த நிலையில் அம்மா உணவகத்துடன் சேர்த்து கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி நேற்று கூறினார்.
திமுகவின் வாக்குறுதிகளில் ஒன்று தான் என்றாலும் கூட, நேற்று தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முக்கியமாக அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
அம்மா உணவக திட்டத்தை இருட்டடிப்பு செய்யவே கலைஞர் உணவகம் கொண்டுவரப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தார். தற்போது இதுதொடர்பாக பேசியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதில் அதிமுகவுக்கு எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை.
கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம். ஆனால், அம்மா உணவகங்களை மறைக்காமல் கலைஞர் உணவகங்கள் செயல்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும், நகர்புற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும், அதிமுகவை வெல்ல தமிழ்நாட்டில் எந்தவொரு சக்தியும் இல்லை. அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எந்தவொரு சலசலப்பும் நடக்கவில்லை. அமைதியான முறையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது” என்றார்.