மிக்ஜாம் புயல் நிவாரண நிதி: யானை பசிக்கு சோளப்பொறியா? ஜெயக்குமார் சாடல்!
தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் ரூ. 682 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து ரூ.160.61 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஓரவஞ்சனை
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "யானைப் பசிக்கு சோளப்பொறி போல புயல் பாதிப்பிற்கு நிவாரணம் மத்திய அரசு வழங்கி உள்ளது. 2015ல் இருந்து ரூ.1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம்,
ஆனால் ரூ.7000 கோடி தான் கொடுத்துள்ளனர். வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் வாரி வழங்குகிறார்கள். மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாராமுகமாக செயல்படுகிறது. தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.