முதல்வரையும் - காவல் துறையையும் அவ்வாறு கூறியது தவறே - மன்னிப்பு கேட்ட ஜெயக்குமார்!
வழக்கு
2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக உறுப்பினர் நரேஷ்குமார் தாக்கியதாக சென்னை தண்டயார்பேட்டையில் வழக்கு தொடரப்பட்டது.
இதில், அதே ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்ற அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில், வாரத்திற்கு 3 நாள் என 2 வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் உத்தரவிட்டது.
நிபந்தனையாக திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திட சென்ற போது, தமிழக முதல்வர், காவல் துறைக்கு எதிராக கோஷங்கள் வைத்தாக மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஜெயக்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வருத்தம்
நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை ஜெயகுமார் சரியாக கடைபிடிக்கவில்லை என வாதாடினார்.
அப்போது, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவ்வாறு ஜெயக்குமார் கோஷமிடவில்லை என்பதை தெளிவுபடுத்தி அவருடன் வந்தவர்களே அவ்வாறு கோஷமிட்டதாக கூறினார்.
மேலும் அதற்கும் ஜெயக்குமார் வருத்தம் தெரிவிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் அவரின் வழக்கறிஞர். இதனையடுத்து நீதிபதி ஜெயக்குமார் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.