சபாநாயகர், முதல்வர், ஆளுநரால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்; நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் - ஜெயக்குமார் உறுதி!
சபாநாயகர், முதல்வர், ஆளுநர் ஒருங்கிணைந்து செயல்படாததால் மக்கள் கஷ்டப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நலதிட்ட உதவிகள்
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகே ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "ஆட்சியில் இல்லாத நேரத்திலும் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய இயக்கம் அதிமுக.
கஷ்டப்படுகிறார்கள்
நாட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. அரிசி விலை கிலோ ரூ.70 வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது.
சபாநாயகர், முதல்வர், ஆளுநர் ஒருங்கிணைந்து செயல்படாததால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும். மகத்தான கூட்டணி அமையும்” என்று தெரிவித்தார்.