திமுகவின் 40 மாதகால ஆட்சி.. இனியும் பொறுத்து கொள்ள முடியாது - எடப்பாடி எடுத்த திடீர் முடிவு!
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில், அக்.8ம் தேதி மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் .
அதிமுக
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக அரசு கடந்த 40 மாதகால ஆட்சியில்; மூன்று முறை மின்கட்டண உயர்வுடன், இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு,பத்திரப் பதிவு கட்டணங்கள் உட்பட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்வு;
பால் பொருட்கள் விலை பலமுறை உயர்வு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு; நியாய விலைக் கடைகளில் குறித்த நேரத்தில் பொருட்கள் வழங்கப்படாமை; கொலை, கொள்ளை என்று தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; பெண்கள், சிறுமியருக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்;
போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்; சென்னை மாநகராட்சியில், மயான பூமியை தனியார் மயமாக்கும் முடிவு,ஏற்கெனவே உயர்த்தப்பட்ட 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி கட்டணம் உயர்த்தப்பட்டு மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது.
போராட்டம்
ஸ்டாலினின் திமுக ஆட்சியில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இதுவரை இல்லாத வகையில் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு என்ற பேரிடி மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக அடித்தள மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில், அக்.8 (செவ்வாய் கிழமை) காலை 10.30 மணியளவில், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.