'என் 33 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவும் கடந்து போகும்' - வி.கே. சசிகலா பேட்டி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர். இதனையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதல்வராக பதவியேற்க காத்திருந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். சிறைத்தண்டனை முடித்து விடுதலையான சசிகலா சென்னை வந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அரசியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சியின் முழு பலத்தையும் கையிலெடுத்த ஈபிஎஸ்- ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்த முடிவு செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினர்.
அதிமுகவின் இந்த நகர்வு சசிகலாவின் தலையில் பேரிடியாக விழுந்தது. சசிகலா தனது பொதுச் செயலாளர் பதவியை மீட்டெடுக்க சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

அரசியலிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட பிறகும், இந்த வழக்கில் பின்வாங்க அவர் விரும்பவில்லை.
இந்நிலையில் தான் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று கூறியுள்ள சசிகலா, அதிமுகவில் தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்றும், 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும்.
ஜெயலலிதாவின் வாக்கை நிறைவேற்றுவதே என் கடமை, எனது 33 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவும் கடந்து போகும் என்றும் தெரிவித்துள்ளார்.