பாஜகவுக்கு நான் அடிமை இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
அதிமுக எந்த கட்சிக்கும் அடிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சமுத்திரம், கன்னியம்பாடி,புதுப்பாளையம்,மேட்டூர்,கோரணாம்பட்டி,வெள்ளாளபுரம் பகுதிகளில் கட்சி கொடியேற்றும் நிகழ்வு நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் மேடையில் சிறப்புரையாற்றினார்.
பேச்சு
அப்போது பேசிய அவர் "அதிமுக ஆட்சியில் 234 தொகுதிகளிலும் நலத்திட்டங்களை வழங்கினோம். ஆனால் தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விலைவாசியும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக எப்போதும் மக்கள் பணியில் ஈடுபடும்.
ஆட்சியில் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் கொள்ளையடித்ததன் காரணமாக ஒரு அமைச்சர் சிறையிலும் இன்னொரு அமைச்சர் விசாரணையிலும் இருக்கிறார்கள். கர்நாடகாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சர் மற்றும் நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட வலியுறுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் தண்ணீர் கேட்டு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார். காவிரி பிரச்சினைக்காக கடந்த ஆட்சியில், அதிமுக எம்.பி.க்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். ஆனால், தற்போதைய தமிழக எம்.பி.க்கள் இதற்காக குரல் கொடுக்கவில்லை.
மேலும், ஸ்டாலின் கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி பாஜக அடிமை என்று. கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற நீங்கள் அடிமையாக இருக்கலாம். அதிமுகவும் அதன் தொண்டர்களும்,நிர்வாகிகளும் எப்போதும் யாருக்கும் அடிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.