அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்த வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு
சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் செல்வதற்கான தடை நேற்று முன்தினம் இரவுடன் நீங்கியது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது சொந்த ஊர்களில் இருந்தபோதிலும் மற்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு நேற்று வர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில்இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. இதே வழக்கு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் விரிவான பதில் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.