அதிமுக பொதுக்குழு : ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை
பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு ,நாளை விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈபிஎஸ் மேல்முறையீடு
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாத நிலை ஏற்பட்டது. அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி , தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார்.
நாளை விசாரணை
இந்த வழக்கானது இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று காலை நீதிபதிகள் துரைசாமி ,சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீட்டை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.
அதே சமயம் , மேல் முறையீட்டு வழக்குகள் பிற்பகல் 1:30 க்கு முன் எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளார்.