பூதாகரமான அ.தி.மு.க ஒற்றைத்தலைமை விவகாரம்.... தலைமை யார் பக்கம் தலை சாய்க்கும்?
அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. வருகின்ற 23-ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது, அதில் இந்த விவகாரம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த ஏழு நாட்களாக ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருத்தரப்பினரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாவட்டச் செயலாளர்கள் ஈ.பி.எஸ்-க்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றனர். ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக இருந்த மாவட்ட செயலாளர்கள் சிலர் இன்று ஈ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவளித்துள்ளனர்.
தொடர்ந்து சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் இரண்டிலும் தோல்வியை கண்ட அ.தி.மு.க கட்சிக்கு ஒற்றைத் தலைமை ஏற்படுத்தினால் தான் வலிமை அடைய முடியும் என அக்கட்சியை சேர்ந்த பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பான முடிவுகள் வருகின்ற பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என நம்பப்படுகிறது.
அ.தி.மு.க -வின் தலைமை வரலாறு
அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் தி.மு.க கட்சியின் தலைவராக கலைஞர் பதவியேற்றார், எம்.ஜி. ஆர் அக்கட்சியின் பொருளாளராக இருந்தார். கணக்கு கேட்டதற்காக எம்.ஜி.ஆர். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனியாக வந்ததும் அவர் அ.தி.மு.க கட்சியை 1972-ஆம் ஆண்டு உருவாக்கினார்,
அதன் பொதுச் செயலாளராக அவர் காலம் முழுவதும் இருந்தார். இந்த இருப்பெரும் கட்சிகள் கடந்த 55 ஆண்டுகளாய் தமிழகத்தின் ஆட்சியை அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளனர். 1977-இல் முதல் முதலாக ஆட்சியை அமைத்ததில் இருந்து முதல்வராக சிறப்பாக பணியாற்றினார் எம்.ஜி.ஆர்.
அவருடைய மறைவுக்கு பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக யார் இருக்க வேண்டும் என்ற சர்ச்சை எழுந்தது. தனி, தனித் தலைமையில் இரண்டு பிரிவாக தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க தோல்வியடைந்த பின்னரே ஜெயலலிதாவுக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைத்தது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதும், அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதற்கு பின் பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு, கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்க தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
சட்டமன்ற தேர்தலின் முடிவுக்கு பின்னர் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விவாதங்கள் நடந்தது, கட்சியின் முக்கிய தலைவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் அ.தி.மு.க -வும் அ.ம.மு.க-வும் இணைந்து சில காலம் செயல்பட்டனர்.
சசிகலா அ.தி.மு.க-வில் இணையும் விவகாரத்தில், சசிகலாவை நேரில் சந்தித்து பேசியதற்காக ஓ.பி.எஸ் அவரது தம்பியை கட்சியை விட்டு வெளியேற்றினார். இதற்கிடையில் சசிகலாவை கட்சியை விட்டு வெளியேற்றிய தீர்மானம் செல்லும் என இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சசிகலா கட்சியில் இணையும் சர்ச்சைகள் வந்ததும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோருக்கு இடையில் முரண்பாடுகள் இருந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் அதற்கு அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் மறுப்பு தெரிவித்திருந்தார்.
ஒற்றைத்தலைமை விவகாரத்தின் தொடக்கம்
கடந்த 14-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டச் செயளாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் பொதுக்குழு கூட்டம் குறித்த ஆலோசனைகள் நடந்ததாகவும்,
’கூட்டம் நன்றியுரையோடு முடிகின்ற நேரத்தில் சிலர் கருத்து சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, மூர்த்தி என்பவரை பேச அழைத்தார். அவர்தான் ஒற்றை தலைமை வேண்டும் என்று ஆரம்பித்தார்’ என ஓ.பி.எஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அந்த கூட்டத்தில் நடந்த ஒற்றைத் தலைமைக்குறித்து செய்தியாளர்களிடம் பேசவேண்டாம் என முடிவு எடுத்ததாகவும், ஆனால் அதை மீறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்ததுதான் இந்த விவகாரம் பூதகரமாக வெடித்ததற்கு காரணம் என்றும்ஓ.பி.எஸ் கூறினார்.
ஒற்றைத் தலைமை தேவையா?
ஒற்றைத் தலைமை தேவை என்று பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இருவரில் யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற வாதத்தால், இரு தரப்பினராக பிரிந்துள்ளனர். ஓ.பி.எஸ் இரட்டைத்தலைமையே நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்த கருத்தும் குறிப்பிடாத ஈ.பி.எஸ், இன்று ஆ.தி.மு.க சமூக வலைதள நிர்வாகிகளிடம் பேசும் வீடியோ பதிவு ஒன்று வெளியானது. அதில் ”அதிமுக எனும் கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது.
அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்த நினைப்போர் முயற்சியை கட்சியின் சமூக வலைதள பிரிவினர் முறியடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஓ.பி.எஸ்-ஸை குறிக்கிறாரா என சர்ச்சைகளை எழுந்துள்ளது.
இது குறித்து இரு தரப்பினரும் அவரவர் இல்லங்களில் ஆலோசனைகள் நடத்தியவண்ணம் உள்ளனர். இதற்கு மத்தியில், பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு ஓ.பி.எஸ் கடிதம் ஒன்றை இ.பி.எஸ்-ஸுக்கு அனுப்பியதாக தகவல்கள் வந்தது, ஆனால் ஈ.பி.எஸ் தரப்பு எந்த கடிதமும் கிடைக்கவில்லை என்று கூறி,
23-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெரும் என உறுதியாக கூறினர். மேலும், ஓ.பி.எஸ். அப்படி கடிதம் எழுதுவது வழக்கத்திற்கு மாறானது என முன்னள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்ற முடிவிற்கு
இதுவரை 2,300 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்றும் ஓ.பி.எஸ் தரப்பினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விவகாரத்தின் தொடக்கம்
எம்.ஜி.ஆர் மாளிகையின் முதல் தளத்தில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, கீழ்த் தளத்தில், `கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்றும், `ஓ.பி.எஸ்-தான் தலைமையேற்க வேண்டும்’ என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. சில மூத்த நிர்வாகிகள் வந்து சமாதனம் செய்ததும், பரபரப்பான சூழ்நிலை அமைதியடைந்தது.
அதன் பிறகு முன்னள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
ஒற்றைத் தலைமை யார் என்பதைக் கட்சிதான் முடிவு செய்யும். அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்பார்ப்பது ஒற்றைத் தலைமையைத்தான். ஒற்றைத் தலைமைக்கான விடையைக் கட்சி சொல்லும், தற்போது நடந்தது கருத்துப் பரிமாற்றம் தான்” என்று கூறினார்.
அதில் இருந்துதான் இந்த ஒற்றைத்தலைமைக் குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்துள்ளது. ஓ.பி.எஸ் இரட்டைத் தலைமையே நீடிக்கட்டும் என்ற நிலைப்பாட்டுடன் உள்ளார், கட்சியில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றைத் தலைமையை ஆதரிக்கின்றனர்.
ஈ.பி.எஸ் இது குறித்து எந்த கருத்தும் நேரடியாக குறிப்பிடவில்லை. பெறும்பாளானோர் ஈ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர்.
இதற்கு தீர்வு எப்போது?
முறையாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கினர். இதனை மீண்டும் ஒற்றைத்தலைமை ஆக்குவதும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல கட்டங்களைக் கடந்தப்பினரே ஏற்படுத்தப்படும்.
பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்க தேவையான ஏற்பாடுகளை ஈ.பி.எஸ் தரப்பு தீவிரமாக செயல்படுத்திக்கொண்டு வருகிறது. ஒற்றைத் தலைமை குறித்த இறுதி முடிவுகள் வருகின்ற பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படுமா? ஒற்றைத் தலைமை யாருக்கு?
இந்த கேள்விகளுக்கு பதில் வரும் 23-ஆம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு பின்னரே தெரியவரும்.