பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு - திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா
அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார்.
அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த ராமநாதபுரம் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, "தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக உடனான அதிமுக கூட்டணியில், அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக தொடங்கியதில் இருந்து அந்த கட்சியில் பயணித்து வருபவர் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அன்வர் ராஜா.
திமுகவில் இணைவு
2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக அன்வர் ராஜா பதவி வகித்தார். தொடர்ந்து, 2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பேசிவந்த அன்வர் ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது என கூறிய அவர், சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதோடு, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் மீண்டும் 2023 ஆம் ஆண்டு கட்சியில் இணைந்து கொண்டார். இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார்.