"10 கோடி வரை திமுகவினர் ஊழல்" : எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி..!
கரூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே உள்ள சாலைகளில், புதிதாக சாலைகள் போடப்பட்டதாக 10 கோடி ரூபாய் வரை திமுகவினர் ஊழல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி.
கரூர் மாவட்டத்தில் 170 கோடி வரை ஒரே ஒப்பந்ததாரருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் முடிவுற்ற பணிகளுக்கு உரிய தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
நெடுஞ்சாலைகளில் புதிதாக போடப்படாத சாலைகளில், சாலைகள் போடப்பட்டதாக கூறி சுமார் 10 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக திமுக மீது புகார் மனுவை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சென்று வழங்கினார்.
மேலும், அதிமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிய நிதி வழங்காத நிலையில், எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. எனவே கூண்டோடு அதிமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக கரூர் - ஈசநத்தம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள, வால்காட்டுப்புதூர், காக்காவடி பிரிவு சாலைகளை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை அழைத்து சென்று காண்பித்தார்.