பொய் வழக்கில் கைது - ஜனாதிபதி, பிரதமருக்கு அதிரடியாக கடிதம் எழுதிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “நான் கடந்த 35 ஆண்டுகளாக தீவிர அரசியல் களத்தில் உள்ளேன். ராயபுரம் தொகுதியிலிருந்து பல முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அமைச்சராகப்பணியாற்றியுள்ளேன். ஒரு முறை சபாநாயகராக பணியாற்றியுள்ளேன்.
நான் நிதி, சட்டம் மற்றும் நீதி, மீன்வளம், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், பிற்பட்டோர் நலம், வனத்துறை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை நிர்வகித்துள்ளேன். தமிழக அரசு சார்பில் சரக்கு சேவை வரி கவுன்சில் உறுப்பினராக செயல்பட்டுள்ளேன். பல முறை ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன்.
அமைப்புச் செயலாளர், வழிகாட்டுக்குழு உறுப்பினர், சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர், வடசென்னை மாவட்ட கழகச்செயலாளர் ஆகிய பதவிகளை நான் வகித்து வருகின்றேன். மக்களிடையே எனக்கு செல்வாக்கு உள்ளது. நான் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளராக உள்ளதால் ஆளும் தி.மு.க.வை தொடர்ந்து பொது வெளியில் விமர்சித்து வருகிறேன்.
தமிழ்நாட்டில் சென்னையிலும் மற்ற நகர, பேரூராட்சி பகுதிகளிலும் நகர உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது. ராயபுரத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களை ஏந்தியபடி குண்டர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டனர். வாக்குச்சாவடிகளை கைப்பற்றினார்கள். கள்ள ஓட்டு போட்டார்கள்.
அவர்களில் ஒருவர் ஆர்.நரேஷ். இவர் தி.மு.க. தொண்டர் ஆவார். அவர் சமூக விரோதி. ஏற்கனவே நடைபெற்ற பல குற்றங்களில் அவருக்கு தொடர்பு உண்டு. அவருக்கு எதிராக பல வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. காவல்துறையினரைக் கூட அவர் தாக்கியுள்ளார்.
அ.தி.மு.க. தொண்டர்களையும் தாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவுகளும் வைரலாகியுள்ளன. குற்ற நடவடிக்கையின்போது அவர் பிடிக்கப்பட்டார். அவரை போலீசாரிடம் ஒப்படைத்தோம். இதற்கிடையே ராயபுரம் போலீஸ்நிலையத்தில் எனக்கு எதிராகவும் எங்கள் கட்சித்தொண்டர்களுக்கு எதிராகவும் ஆர்.நரேஷ் பொய் புகார் கொடுத்தார்.
இந்த பொய் புகார்களின் அடிப்படையில் போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனம் தலைமையில் போலீசார் எனது வீட்டிற்குள் திடீரென புகுந்தார்கள். நான் அப்போது எனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுடன் இரவு உணவு சாப்பிட தயாராகிக் கொண்டு இருந்தேன். நீங்கள் கைது செய்யப்பட்டு உள்ளீர்கள் என்று போலீசார் என்னிடம் தெரிவித்தனர்.
உடனடியாக போலீஸ் வேனில் ஏறுமாறு என்னை கட்டாயப்படுத்தினார்கள். எதற்காக கைது செய்யப்பட்டுள்ளேன் என்ற விவரத்தை என்னிடம் அவர்கள் தெரிவிக்கவில்லை. உடையை மாற்றிக்கொள்ளவும் இரவில் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. போலீஸ் வேனில் என்னை ஏற்றினார்கள்.
ஆனால் என்னை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லவில்லை. நள்ளிரவு எழும்பூரில் உள்ள மெட்ரோ பாலிட்டன் நீதிமன்ற வளாகத்திற்கு என்னை கொண்டுசென்றனர். அங்கு ஜார்ஜ்டவுன் நீதிமன்ற மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் முன்பு என்னை ஆஜர்படுத்தினார்கள்.
தி.மு.க. அரசின் கட்டளைப்படி போலீசார் என்னிடம் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டனர் என்பதையும் நான் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தேன். இது மனித உரிமை மீறல் என்பதையும் உச்சநீதிமன்ற வழிமுறைகளுக்கு புறம்பானது என்பதையும் எடுத்துரைத்தேன்.
எனக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதை தனது உத்தரவில் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். ஆனால் என்னை பூந்தமல்லி கிளைச்சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அரசியல் கைதிகளுக்கான முதல் வகுப்பு வசதியில்லை.
உணவும் தரவில்லை. உடல்நல பிரச்சினைகளை தணிப்பதற்கான மருந்து மாத்திரைகளும் தரப்படவில்லை. அசுத்தமான அறையில் கொசுக்கடிகளுக்கிடையே நான் அவதிப்பட்டேன். மாஜிஸ்திரேட் அளிக்க உத்தரவிட்ட எந்த வசதியும் எனக்கு செய்து தரப்படவில்லை.
சில நாட்களுக்குப்பிறகே நான் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டேன். எனது மருமகனுக்கும் அவரது சகோதருக்குமிடையே சொத்து தகராறு உள்ளது. இந்த வழக்கிலும் என்னை அனாவசியமாக சேர்த்தார்கள். சொத்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது.
நான் திருச்சியில் தங்கியிருந்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்பது நிபந்தனையாகும். திருச்சியில் நான் தங்கியிருந்தபோது அ.தி.மு.க. தொண்டர்கள் என்னை அணி அணியாக வந்து சந்தித்தார்கள்.
இதையடுத்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் என்மீதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து வரும் தி.மு.க. அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ்துணை கமிஷனர் சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் பூபாலன், சங்கர பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி சம்பவத்திற்குப் பிறகு போலீஸ் உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ள ரவி ஆகியோர் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan