அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு - தொண்டரின் கோஷத்தால் கோபமடைந்த ஒபிஎஸ்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க பன்னீர்செல்வம் வந்தபோது ஒற்றை தலைமை என தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள 73 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்க பங்கேற்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை அலுவலகம் வருகையில், தொண்டர்கள் சிலர் ஒற்றை தலைமை என கோஷம் எழுப்பினர். ஏற்கனவே, பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக தோற்றம் நிலவும் நிலையில், தொண்டர்கள் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் மாவட்ட செயலர்களுடன் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்காக இப்போதே குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி, சசிகலா அதிமுக.,வினருடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசும் விவகாரம் போன்றவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.