எதிர்கட்சித் தலைவர் செங்கோட்டையன்னா?

EPS ADMK OPS SENGOTAIYAN
By Arun Raj May 09, 2021 08:55 AM GMT
Report

நீயா? நானா? என்ற போட்டி அதிமுகவில் வலுக்கத் தொடங்கிவிட்டது! ஆட்சி அதிகாரம் என்ற புதையலை பங்கிட்டுக் கொள்வதற்காகவும், ஆட்சி அதிகார கட்டிலை சண்டையிட்டு இழந்துவிடக் கூடாது என்றும்தான் இருவரும் இத்தனை நாட்கள் ஒன்றுபட்டிருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டினார்களா!

தற்போது யார் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது என்பதில் இருவருக்கும் போட்டி ஆரம்பித்துவிட்டது. ”ஆட்சித் தலைவராக இருந்து தேர்தலை ஒரு போர் வீரன் போல முன்னனிலையில் நின்று அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்தது நான் தான்!

இன்று 65 தொகுதிகள் கிடைத்தது என்றால் அது என் முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான். வெற்றி பெற்றால் நான் தானே முதலமைச்சராகி இருப்பேன். அந்த வகையில் இப்போது வெற்றி பெறாத நிலையில் நானே எதிர்க்கட்சித் தலைவர்’’ என்பது இ.பி.எஸ் வாதம்!

எதிர்கட்சித் தலைவர் செங்கோட்டையன்னா? | Admk Eps Ops 

”234 தொகுதியில் 65 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றோம்! எனவே இந்த தோல்வி உங்களால் தான். குறிப்பாக கடைசி நேரத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று அவசர கதியில் அறிவித்து, மற்ற சாதிகளின் எதிர்ப்பை பெற நீங்கள் தான் காரணம்!

இதனால் தென் மாவட்டத்தில் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாயிற்று. நீங்கள் பலனடைய என்ன ஏற்பாடோ அதைமட்டும் செய்துவிட்டு மற்றவர்களின் தோல்விக்கு காரணமாகிவிட்டீர்கள்.

என்னைக் கலந்து பேசாமல் தன்னிச்சையாக செயல்பட்டு இன்று கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டீர்கள்’’ என்பது ஒ.பி.எஸ் வாதம்.

உண்மையில் என்ன நடந்தது?

இ.பி.எஸ், ஓபிஎஸ் இருவருமே அதிமுகவின் வட்டாரத் தலைவர்களாகத் தான் சுருங்கிப் போனார்கள்! இ.பி.எஸ் கொங்குமண்டல அதிமுகவின் தலைவராகவும், ஒ.பி.எஸ் தென் மாவட்ட அதிமுகவின் தலைவராகவும் தான் செயல்பட்டனர்.

அதனால் தான் தமிழகத்தின் பிற இடங்களில் அதிமுக படு தோல்வியை சந்தித்து உள்ளது. ‘’அதிமுக வெற்றி பெற்றால் இ.பி.எஸ் தானே மீண்டும் முதல்வராகப் போகிறார். ஆகவே, நான் எதுவும் கட்சி வெற்றி பெற முயற்சிக்க மாட்டேன்.’’ என்பது தான் ஒ.பி.எஸ்ஸின் நிலைபாடாக இருந்தது என்று கூறுகின்றனர்.

அதிமுக எதிர்கட்சி வரிசைக்கு வர வேண்டும். அப்போது தான் எதிர்கட்சித் தலைவராக இருந்து தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளலாம் என்பது அவரது கணக்காம்.

எதிர்கட்சித் தலைவர் செங்கோட்டையன்னா? | Admk Eps Ops

ஆனால் ஒ.பி.எஸ்ஸுக்கு தற்போது பிரச்சினை என்னவென்றால், வெற்றி பெற்று வந்த எம்.எல்.ஏக்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசிக்கும் அதிகமானவர்கள் இ.பி.எஸ் ஆட்கள்!

ஜனநாயகப்படி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டுபோட்டு தான் தங்களுக்கான தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் இ.பி.எஸ் அதிமுகவின் சட்டமன்ற தலைவராவதை ஒ.பி.எஸ் தடுத்துவிட முடியாது.

அதனால்தான் வழிகாட்டுக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு கூடி முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும், இ.பி.எஸ் எதிர்கட்சித் தலைவராகிவிட்டால், கட்சியின் ஒற்றை அதிகார மையமாக மாறிவிடுவார்.

ஆகவே, அவருக்கு செக் வைக்காவிட்டால் தன் எதிர்காலத்திற்கே ஆபத்து என்று நினைக்கிறார். அதுவும் மட்டுமின்றி, எதிர்கட்சி தலைவர் என்பது கேபினெட் அந்தஸ்துள்ள ஒரு பதவி.

அரசு பங்களா, கார் போன்றவை கிடைக்கும். எதிர்கட்சி துணைத் தலைவருக்கு கிடைக்காது. எனவே, பதவியை விட்டுத் தரக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்.

ஆனால், இ.பி.எஸ் ஆட்கள் இதை இன்னொருவிதமாக சொல்கிறார்கள்! பன்னீரை எதிர்கட்சித் தலைவராக்கினால், அவர் கட்சியை பலவீனப்படுத்திவிடுவார்.

வலுவான தலைமை அதிமுகவிற்கு இல்லையென்றால், அதிமுகவை பாஜக ‘ஸ்வாகா’ செய்துவிடும். அதற்கு துணைபோவதாகத்தான் ஒ.பி.எஸ்சின் நடவடிக்கைகள் இருக்கும்.

மாறாக இ.பி.எஸ் இருந்தால் பாஜகவை வைக்கும் இடத்தில் வைத்து, கட்சியை கட்டுக் கோப்பாக காப்பாற்றிவிடுவார் என்கின்றனர் , அதே சமயம் சட்டமன்றத்தில் பேச வேண்டிய விஷயங்களை தெளிவாக எடுத்துச் சொல்வதில் ஒ.பி.எஸ் கெட்டிக்காரர்!

சகல பிரிவினரிடமும் கலந்து பேசி உறவாடுவதிலும் வல்லவர். ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அவர் சென்றது அவரது அணுகுமுறைக்கு ஒரு சான்றாகும்.

இது ஒருபுறம் இருந்தாலும் இவர்கள் இருவரைவிட செங்கோட்டையன் சீனியர், ஆகவே அவருக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுக்கவேண்டும் எனறு உறுப்பினர்கள் ஒருபக்கம், எப்படி செய்யபோகிறார்கள் எனறு பொறுத்திருந்து பார்ப்போம்!!!