பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து போராட்டம்: கனிமொழி தடுத்து நிறுத்தம்

admk-election-dmk-tamilnadu
By Jon Jan 10, 2021 02:11 PM GMT
Report

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்துக்கு பங்கேற்க சென்ற கனிமொழி எம்பியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பில் திருநாவுக்கரசு என்பவர் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் ஹேரோன் பால், பாபு ஆகியோரை சிபிஐ போலீஸாா் கைது செய்தனா்.

இதனையடுத்து குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி திமுக இன்று போராட்டம் நடத்தவுள்ளது, இதில் பங்கேற்க சென்ற கனிமொழியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஈச்சனாரி அருகே கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் .தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பொள்ளாச்சி பாலியல் வன்முறை கொடூரத்தை கண்டித்து இன்று திமுக சார்பாக நடைபெற இருக்கும் போராட்டத்திற்கு வரும் பெண்களையும் கழக தொண்டர்களையும் ஆங்காங்கே போலீசார் வழிமறித்து திருப்பி அனுப்புவதாக தகவல் வந்து கொண்டே இருக்கிறது, எங்கள் வாகனங்களையும் நிறுத்தினார்கள், போலீசாரின் இச்செயலை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ததாக தெரிவித்துள்ளார்.